🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*💗இன்றைய சிந்தனை...*
*வாழ்வின் சாரம்..!!*
மனம் ஒரு ஏணியாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நீங்கள் அற்பமான கீழ்நிலைக்குப் போகலாம் அல்லது உன்னதமான மேல் நிலையை எட்டலாம். இந்த ஏணி தவிர்த்து ஒதுக்கி விட முடியாத ஒன்று. நீங்கள் மனதின் எஜமானராக மாறினால் தான் ஏணி வழியாக சென்று மேல்நிலை எய்த இயலும். மனதின் சேவகனாக நீங்கள் இருந்தால் கீழ்மட்ட அடிநிலைக்குத்தான் போவீர்கள்.
மனதுக்குச் சேவகனாக இருப்பது ஆபத்தான விஷயம். நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதுடன் அது முடிந்து போவதில்லை.
மனதில் குழப்பமும் சந்தடியும் நிறைந்து கிடக்கின்றன. அது உங்களை கோபப்படச் சொல்லி உத்தரவு போடும். மறுகணமே கோபப்பட்டதை எண்ணி வருத்தபடு என்று அதிகாரம் செய்யும். உலகை ரசித்து அனுபவி என்று ஒரு எண்ணம் கூறும். இன்னொரு எண்ணம் சகலத்தையும் துறந்துவிடு என்று எடுத்துரைக்கும்.
திருடினாலும் தப்பில்லை எப்படியாவது பணம் சேர்த்துக் கொள் என்று மனம் அறிவுரை சொல்லும். அது பாவச் செயல் என்று மற்றொரு எண்ணம் மனதில் எழும். இவ்வாறு மனதில் எழும் எண்ணங்களுக்கு கணக்கே இருக்காது. இந்த அனைத்து எண்ணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் மனமாகும்.
உங்கள் புத்தி ஏதாவது ஒரு விஷயத்தில் சென்றால் மனம் அமைதியான நிலையில் இருக்கும். மனதில் அதற்கு வழியில்லை. அங்கே எண்ணக் குவியல்கள் மண்டிக் கிடக்கின்றன. சந்தைக்கடை போல அது கசப்பானதாகவே இருக்கிறது.
மனம் பள்ளியின் வகுப்பறை போன்றது எனலாம்.ஆசிரியர் அங்கே இருக்கும் வரை மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து பாடம் படிப்பார்கள். அங்கே அமைதி நிலவும். ஆசிரியர் எழுந்து அப்பால் போனதும் சகலமும் கட்டவிழ்த்து போய்விடும். சண்டைகள் நடக்கும். புத்தகங்கள் தரையில் வீசப்படும். சிலேட்டுகள் உடைபடும். மேஜைகள் தலைகீழாகக் கவிழும். கரும்பலகையில் கண்டபடி கிறுக்கி வைக்கப்படும்.
இப்போது மாணவர்களைக் கட்டுபடுத்த அங்கே யாரும் கிடையாது. அவர்களை மேற்பார்வை செய்ய ஆளில்லை. ஆசிரியர் திரும்பி வந்ததும் வகுப்பறையில் பரிபூரண அமைதி ஏற்படுகிறது. புத்தகங்கள் பழைய
இடத்துக்குத் திரும்பி விடுகிறது. எல்லோருடைய பார்வையும் தரைநோக்கித் தாழ்கிறது. மீண்டும் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.
நீங்கள் எஜமானனாக மாறும் போது மனம் சேவகனாக மாறி அடங்கி நடக்கத் துவங்கி விடும். நீங்கள் உங்கள் அதிகாரத்தை இழக்கும் போது மனம் அடங்காப்பிடாரியாக மாறி விடுகிறது. அதன் ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அங்கே ஒன்றல்ல...பல கணக்கற்ற குரல்கள் ஒலிக்கும். அவை உங்களை எந்த இடத்திற்கும் அழைத்துச் சென்றிட இயலாது.
மனிதன் பலதரப்பட்ட எண்ணங்களில் வசப்பட்டவன் என்று மகாவீரர் கூறுகிறார். மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இதை நவீன மனோதத்துவ இயலும் ஒப்புக் கொள்கிறது. மனிதனுக்குப் பல எண்ணங்கள் ஒரே சமயத்தில் உதிக்கின்றன என்பதை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.
உங்களுக்கு இருப்பது ஒற்றைச் சிந்தனை அல்ல. கணக்கற்ற எண்ணங்கள் உள்ளே ஓடுகின்றன. அது ஒரு வேலைக்காரனுக்கு ஆயிரம் எஜமானர்கள் இருப்பது போன்றதாகும். ஒவ்வொரு எஜமானரும் ஒவ்வொரு உத்தரவு போடுவார். யார் பேச்சை நான் கேட்பது?என்று வேலைக்காரனுக்கு பைத்தியம் பிடித்து விடும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
எனவே ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். அப்போது ஆசிரியர் திரும்பி வந்தது போலாகி விடும். வேலைக்காரர்கள் பலர் இருந்தாலும் ஒவ்வொருவரையும் அவரவர் இடத்தில் வையுங்கள். எஜமான் ஒருவனாக இருக்கும் போது நீங்கள் செல்லவேண்டிய வாழ்க்கை திசை தென்பட்டு விடும்.
வாழ்வின் சாரத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் யார் என்பதை..
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
*💗வாழ்க வளமுடன்💗*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
No comments:
Post a Comment