ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் !
2.8.20
- ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை !
ஆடிப்பெருக்கு ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார்.
சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்து கொண்டிருந்த வேளை... அப்போது தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கப்படுகிறார் அகத்திய பெருமான்.
அகத்தியருக்கு ஆசி வழங்கி அவரைத் தென் திசைக்கு அனுப்பும்போது தன் கரங்களில் தவழ்ந்திருக்கும் மலர் மாலை ஒன்றை அவருக்கு வழங்குகிறாள் பார்வதிதேவி. அந்த மாலை ஒரு இளம்பெண் ணாக உருமாறுகிறது. தவசீலரான அகத்தியர் அவளைத் தன் கமண்டலத்துக்குள் அடக்கி விடுகிறார்.
குடகில் தவம் இருந்தபோது கமண்டலம் சரிந்து, நீர் ஓடியதல்லவா? கமண்டலத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணே காவிரி என்னும் நதியாகிப் பெருகி ஓடினாளாம். எனவே, காவிரி என்பவளும் பார்வதிதேவியின் ஓர் அம்சமே. அதாவது, சிவபெருமானின் தேவி என்றும் சொல்வர்.
இந்தக் கதைப்படி பார்த்தால், மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!எனவேதான் தன் அண்ணனை வணங்கும் விதமாக மாலவன் ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரி!
ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் பார்க்கிறோம். தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.
வருடத்தின் சில விழாக்களில் இந்தப் பாசத்தை ஸ்ரீரங்கநாதரே வெளிப்படுத்துவார். அதில் ஒன்று - இந்த ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார். உறவினர்கள் வீடுகளுக்குப் போனால் அவர்களது முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருப்போம், அல்லவா? அதுபோல் பாச மிகுதியால் தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் அமர்ந்திருப்பார். போன சூட்டோடு உடனே கிளம்பி விட மாட்டார். மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் காணப்படுவார்.
காலையில் இவருக்கு காவிரிப் படித்துறையில் திருமஞ்சனம் நடைபெறும். வருகின்ற பக்தர்கள் அனைவரும் அண்ணனையும், தங்கையையும் வணங்குவார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்வார்.
இந்த விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும் என்பர்.🙏🌹🌈
No comments:
Post a Comment