இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் திருக்கொடியலூர்
ஸ்ரீ சனீஸ்வர பகவான் அவதரித்த திருக்கொடியலூர்
சூரியனின் பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும், மேகநாதரிடம் எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் என்று வழிபட்டனர்.
அதற்கு இறைவன் நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி அம்பாள் லலிதாவையும், தன்னையும் வழிபாடு செய்தால் அந்த பலன் கிடைக்கும் என வரமளித்தார்.
அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் இத்தலத்தில் பூஜை செய்தனர். பகவான் சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார்.
பின்னர், சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும்படி அருள்செய்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்துக்கு மேற்கே உள்ளது.
கூடியலூர், காலப்போக்கில் பெயர் மருவி கொடியலூர் ஆயிற்று. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக் கூறப்படுகிறது.
அகத்தியர், ஹயக்கிரீவர் கூறியபடி லலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையைப் பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின் சிவ பூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீ லலிதாம்பிகையை ஆனந்தவல்லியாக நினைத்து, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமியை பூஜை செய்து பெரும் பேறு பெற்றார். அந்த சமயத்தில் அசரீரியாக அகத்தீஸ்வரே எமதர்மராஜனிடமும், சனீஸ்வரரிடமும் இத்தலத்தில் வீற்றிருந்து, எங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எம வதையையும், சனி உபாதையையும் நீங்கச் செய்து அருள்புரிய வேண்டும் என கட்டளையிட்டார்.
அதிலிருந்து கூடியலூரான கொடியலூரின் தென்புறம் எமதர்மனும், வடபுறம் சனீஸ்வர பகவானும் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.
அகத்தியர் சிவ பூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் ஸ்ரீ சனிஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் அமைந்துள்ளார். மேலும்,
ஸ்ரீ சனிஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்குவதுடன் நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
ஏழரைநாட்டு சனி, அஷ்டம சனி, சனி தோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷமும் நீங்கி நன்மை ஏற்படும்.
வழி: திருவாரூர் மாவட்டம், பேரளத்திலிருந்து மேற்கே திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment